ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஆச்சார்யா மீண்டும் ஆஜராகிறார்
16th August 2012 · 0 Comments
பெங்களூர், ஆக. 16-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை நடத்தும் நீதிபதி மல்லிகார்ஜுனையா நியமனத்தை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், மல்லிகார்ஜூனையா நியமனம் சரியானது என தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து பெங்களூர் ஐகோர்ட்டில் சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக அரசு சார்பில் ஆஜராகி வந்த அரசு சிறப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா அந்தப் பொறுப்பில் இருந்து விலகுவதாக, உள்துறை செயலாளரிடம் கடிதம் கொடுத்தார். வழக்கு விசாரணையில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி நியமனம் தொடர்பான வழக்கின் விசாரணை பெங்களூர் ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க கர்நாடக அரசு கூடுதல் அவகாசம் கேட்டது. இதனால் விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இந்த விசாரணையின்போது கோட்டுக்கு வந்திருந்த ஆச்சார்யா, தன்னை இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி மோகன், அடுத்த அரசு வழக்கறிஞரை நியமிக்கும்வரை அரசு தரப்பில் தொடர்ந்து ஆஜராகவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்ற ஆச்சார்யா, நாளை தனிக் கோர்ட்டில் நடைபெற உள்ள சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையிலும் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
By suriyantv
