ரூ 16 ஆயிரம் கோடி முறைகேடு: கிரானைட் அதிபர் சொத்துக்கள் முடக்கம்
16th August 2012 · 0 Comments
மதுரை, ஆக. 16-மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடத்தப்பட்டதாக தெரிய வந்ததது. இதுதொடர்பாக மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து சோதனை நடத்த உத்தரவிட்டார். 15-வது நாளாக இன்றும் கிரானைட் குவாரிகளில் சோதனை நடந்து வருகிறது.
அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், வண்டிப்பாதை ஆகியவற்றில் அரசு அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்து இருப்பது சோதனையில் தெரியவந்தது. கண்மாய் மற்றும் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இதனிடையே முறைகேட்டில் ஈடுபட்ட பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், மருமகன் மகாராஜன், சிந்து கிரானைட் அதிபர் செல்வராஜ், பி.எஸ். கிரானைட் அதிபர் பெரியசாமி, மதுரா கிரானைட் அதிபர் பன்னீர், ஒலிம்பஸ் கிரானைட் இயக்குனர்கள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி மற்றும் நாகராஜ் உள்ளிட்ட 18 பேர் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிரானைட் முறைகேட்டில் பி.ஆர்.பி. நிறுவனம் அதிக அளவில் ஈடுபட்டுள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்டமாக மேலூர் தெற்கு தெருவில் உள்ள பி.ஆர்.பி. அலுவலகம் `சீல்’ வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் கிரானைட் அதிபர்களின் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
ரூ.17 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்கள் தனிக்குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடத்திய பி.ஆர்.பி. நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து பி.ஆர்.பி. நிறுவனத்தின் சொத்துக்களை மதிப்பீடு செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை, மேலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பி.ஆர்.பி. நிறுவனத்தின் சொத்துக்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த சொத்துக்களை முடக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பி.ஆர்.பழனிச்சாமியின் அலுவலகம் மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் பல்வேறு ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது. கடந்த வாரம் 2 கார்களில் கடத்தப்பட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்களில் கிரானைட் முறைகேடு ஆவணங்கள் கடத்தப்படுவதாக மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ராவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு பி.ஆர்.பி. நிறுவனத்தின் அனைத்து பஸ்களையும் சோதனை நடத்த கலெக்டர் உத்தர விட்டார். மேலூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 2 பஸ்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அந்த 2 பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து மற்ற பஸ்களையும் பறிமுதல் செய்து சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மதுரையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் பி.ஆர்.பி. பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்களின் லைசென்சுகளையும் ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. மேலும் பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகளின் லைசென்சுகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மேலூர் பகுதியில் அனைத்து லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கிரானைட் முறைகேடு தொடர்பாக முன்னாள் சுரங்க அதிகாரி சண்முகவேல் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு மேலூர் பகுதிகளில் நிலம் வாங்கி கொடுத்ததாக மேலூர் தெற்கு தெரு ஊராட்சி தலைவர் சரவணக்குமார், நில புரோக்கர்கள் மச்சக்காளை, ஜீவானந்தம் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் கிரானைட் முறைகேடு மற்றும் நில அபகரிப்பு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கிரானைட் மோசடி தொடர்பாக மேலூர், கீழவளவு போலீஸ் நிலையங்களில் இதுவரை 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தும் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனிடையே குவாரி அதிபர்களின் முன்ஜாமீன் மனுக்கள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
By suriyantv
